கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மது போதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று, ஆபாசமாக பேசிய விவகாரத்தில் காவலரை இடைநிறுத்தம் செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மது போதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று, ஆபாசமாக பேசிய விவகாரத்தில் காவலரை இடைநிறுத்தம் செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் (37). இவர் அதே பகுதியில் உள்ள வன்னியன் கோவில் அருகே சிறு தொழிற்சாலை(லேத்) நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா நேற்று மதியம் கீரணத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அத்திப்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை தாண்டும் போது சீருடையில் இருந்த காவலர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து உள்ளார். இதனை கண்டு, அதிர்ச்சி அடைந்த சரண்யா பயத்தில் வேகமாக சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து காவலர் சரண்யாவை வழிமறித்து ஆபாசமாக வர்ணித்துள்ளார். இதையடுத்து பயந்து போன சரண்யா அங்கிருந்து தப்பித்து அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஃபேன்சி ஸ்டோரில் தஞ்சமடைந்தார். பின்னர் ஃபேன்சி ஸ்டோருக்கும் காவலர் தொடர்ந்து வர சரண்யா தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ஒன்று கூடிய பொதுமக்கள் மற்றும் சரண்யாவின் உறவினர்கள் காவலரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து பொதுமக்கள் காவலரை சிறைபிடித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவலர் பெயர் பிரபாகரன் என்பதும் இவர் காவல்துறை கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மீது கோவில்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை இடைநீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.