கோவை : கோவை ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பேசி அவர் கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதகரை, தட்டிக்கேட்ட மனிதநேயமுள்ள ரயில்வே காவலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பேசி அவர் கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதகரை, தட்டிக்கேட்ட மனிதநேயமுள்ள ரயில்வே காவலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70ற்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும் சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வருகின்றனர்.
இப்படி வரும் பயணிகளிடம் சில டிக்கெட் பரிசோதகர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளது.
ஆனால் இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காத பட்சத்தில் கடந்த ஜீலை மாதம் மீண்டும் கோவையில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணியிடம் தரை குறைவாக பேசி, பயணி கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.
டிக்கெட் பரிசோதகரின் அநாகரீகம்
கடந்த ஜீலை 22ம் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தமாக கோவை வந்துள்ளார். இதில், இவர் தனது பணியை முடித்து விட்டு அன்று மதியமே தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.
அப்போது ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பத்மகுமார், மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். இதற்கு மாரியம்மாள், டிக்கேட் கணவரிடம் உள்ளது என்றும் அவர் முன்னே உள்ள இரயில் பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தினர். பின்னர் மாரியம்மாள் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வருகிறேன், என சொன்னபோது பத்மகுமார் அவரை தரை குறைவான வார்த்தைகளில் பேசி அவர் கொண்டு வந்த பாத்திரங்களை எட்டி உதைத்ததாக, மாரியம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஆர்.பி.எப் தலைமை காவலர், வீரமுத்து பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது, இது தவறான செயல், இது நமது பணியல்ல, எனவும் டிக்கெட் பரிசோதகர் பத்மகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த பத்மகுமார் "எனக்கே அறிவுரை சொல்கிறாயா", என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இரயில்வே காவலருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியானதை அடுத்து விசாரணையும் நடைபெற்றது.
ஆனால், பயணியிடம் பொது இடத்தில் மனிதநேயமற்ற முறையில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாறாக, தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு தவறை தட்டி கேட்டவர் மீது மறைமுகமாக நடவடிக்கை எடுத்த சம்பவம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித நேயமுள்ள காவலருக்கு கிடைத்த இடமாற்ற பரிசு
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பி.எப்., தலைமை காவலர் வீரமுத்து கோவை ரயில் நிலையத்தில் சுமார் 2-அரை ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணியில் அமர்ந்தது முதல் ரயில்வே துறைக்கும் பொதுமக்களுக்கு ஒரு அன்பு பாலமாக செயல்பட்டார், என்று சொன்னால் அது மிகையாகாது.
வீரமுத்து பொதுமக்கள் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற பல விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக மீட்டு நிர்வாகத்தின் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதில், குறிப்பாக சுமார் 25 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து உள்ளார்.
அதேபோல, ரயில் நிலையத்தில் கீழே கிடந்த 12,500 ரூபாய், 1500 ரூபாய் விலை உயர்ந்த 9 செல்போன்கள் என சுமார் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் மதிப்புடைய பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து நற்பெயர் பெற்று உள்ளார்.
இப்படி ரயில்வே துறைக்கும் காவல்துறைக்கும் நற்பெயர் எடுத்துக் கொடுத்து வந்த இந்த காவலர் மனிதநேயத்தோடு அநியாயத்தை தட்டி கேட்டதால் அவருக்கு ரயில்வே துறை மறைமுகமாக மதுரை டிவிசனுக்கு இடமாற்றத்தை பரிசாக வழங்கி உள்ளது.
இது குறித்து வீரமுத்து கூறும்போது :
எனக்கு கோவையில் இருந்து இடமாற்றம் செய்ய இன்னும் இரண்டரை ஆண்டுக்கு மேல் காலம் உள்ளது. ஆனால் ஒரு சில அழுத்தங்களால் என்னை மதுரைக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
நான் ஏற்கனவே சொந்த ஊரான சேலத்தில் இருந்து கோவையில் வசித்து வருகிறேன். இப்படி இருக்க மதுரை டிவிஷனுக்கு மாற்றுவது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
நல்லது செய்ததற்காக எனக்கு கிடைத்த இந்த இடமாற்ற பரிசு வேதனை தருகிறது. என் பணியிட மாற்றத்தை ரயில்வே துறை அதிகாரிகள் தயவு கூர்ந்து திரும்பப் பெறவேண்டும், என மனம் வருந்தி கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
தவறு செய்த டிக்கெட் பரிசோதகரை அவரது சங்கம் தனது அழுத்தத்தின் மூலம் காப்பாற்றியுள்ளது, என கூறப்படுகிறது. ஆனால், நியாயத்தை தட்டிக்கேட்ட ரயில்வே காவலருக்கு அவரது தரப்பில் போதுமான ஆதரவுகள் இல்லை என்பதை அவரது இடமாற்றம் கோடிட்டு காட்டுகிறது.