கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கான நீர்வரத்து 15,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக சரிவடைந்துள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கான நீர்வரத்து 15,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக சரிவடைந்துள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை காடுகளின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையானது தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தாண்டு மூன்றாவது முறையாக நிரம்பியது. அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிவரை தண்ணீர் உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே உபரி நீரானது 15,000 கன அடிவரை நேற்று இரவு வரை வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
நேற்று நள்ளிரவு வரை அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 15,000 கன அடியாக இருந்ததால் அணையில் இருந்து 15,000 கன அடி நீரும் உபரியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு படிப்படியாக குறைந்ததால் இன்று காலை நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து 15,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவ தற்போது 15,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீரின் அளவு தற்போது இரண்டு மதகுகள் வழியே மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 6000 கன அடி தண்ணீர் மின்சார தயாரிப்பு பணிக்காக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. முழு கொள்ளளவான அணையின் தற்போதைய நீர் மட்டம் 97அடியாக உள்ளது.