கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தளம் பில்லூர் அணை நிரம்பியதையடுத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தளம் பில்லூர் அணை நிரம்பியதையடுத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை காரமடை அருகே உள்ள பரளிக்காடு என்ற பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழல் சுற்றுலா தளத்தை வனத்துறையினருடன் இணைந்து மலைவாழ் மக்களும் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வர முன்பதிவு செய்வது அவசியம்.
இப்படி வனத்தின் நடுவே அணையின் நீர் தேக்கபகுதியில் பரிசல் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிப்பதுடன் வனத்துறை பாதுகாப்புடன் டிரக்கிங்,மலைவாழ் மக்களின் உணவு, மூலிகை குளியல் என பல சிறப்பம்சங்கள் இந்த பரளிக்காடு பகுதியில் உள்ளது.
ஆகவே இந்த சுற்றுலா பகுதிக்கு தமிழகம் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
ஆனால் பருவமழை காலங்களில் அணை நிரம்பும் பொழுது இந்த சுற்றுலா தளத்தை பயன்படுத்துவது ஆபத்தானது.
இது போன்ற பருவ மழை பெய்து அணை நிரம்பும் நேரங்களில் வனத்துறையினர் இந்த சுற்றுலா பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது வழக்கம்.
இப்படியிருக்க நேற்று மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் தேக்க பகுதியில் நீரோட்டம் அதிகமான காரணத்தால் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பில்லூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்ததால் கடந்த ஒரு மாதகாலமாக இந்த சூழல் சுற்றுலா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் சூழல் சுற்றுலா நடைபெற இருந்ததையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் முன்பதிவை தொடங்கினர்.
ஆனால் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியதால் தற்போது மீண்டும் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து தொடர்பான தகவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.