கோவை : கோவை மாவட்டம் போலுவம்பட்டிஅருகே விநாயகர் சிலை கரைத்த போது இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அந்த இளைஞரின் உடல் இன்னும் கிடைக்காததையடுத்து அவரின் உறவினர்கள் ஆலாந்துறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை மாவட்டம் போலுவம்பட்டிஅருகே விநாயகர் சிலை கரைத்த போது இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அந்த இளைஞரின் உடல் இன்னும் கிடைக்காததையடுத்து அவரின் உறவினர்கள் ஆலாந்துறை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு குறிப்பிட்ட குளங்களில் கரைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விராலியூர் ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 அடி விநாயகர் சிலை ஆலாந்துறை அருகே உள்ள இக்கரை போலுவம்பட்டி நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டது.
அப்போது நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த நிலையில் சிலையை கரைக்க சென்ற ராமு என்ற 21 வயது இளைஞர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட மக்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நேற்று இரவுவரை இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. மீண்டும் இன்று காலை முதல் இளைஞரின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இளைஞரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞரின் உடலை மீட்க ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து ஆலாந்துறை அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆலாந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.