நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பல மாதங்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பல மாதங்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சன்ஷைன் நகர் பகுதியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குட்டியுடன் வந்த கரடிகள் அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியின் கதவைவினை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சன்ஷைன் நகர் பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து கரடிகள் அட்டகாசம் செய்து வந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில் விரட்டியடிக்கப்பட்ட கரடிகள் கடந்த மார்ச் மாதம் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராம மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தின. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டினை வைத்தனர். இந்த கூண்டினில் அட்டகாசம் செய்த இரு கரடிகளில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. இதன் பின்னர் சிக்கிய கரடியினை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
இந்த நிகழ்வினையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி மீண்டும் சன்ஷைன் நகா் பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று அங்குள்ள கோவிலின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதுபோன்று கரடியின் தொடர் அட்டகாசத்தால் அச்சமடைந்த அப்பகுதி கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் போராட்டம் நடத்தவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
கிராம மக்களின் கோரிக்கையினை ஏற்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு சன்ஷைன் நகரில் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் கரடிக்கு பிடித்தமான பழவகைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் அட்டகாசம் செய்து வந்த கரடி நேற்று அதிகாலை 4 மணியளவில் வனத்துறையினர் வாய்த்த கூண்டிற்குள் சிக்கியது. கரடியின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் முருகன், வீரமணி மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள், கிராம மக்கள் உதவியுடன் பிடிபட்ட கரடியை பவானி பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
இது குறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் கடந்த மார்ச் மாதம் பிடிபட்ட கரடி பெண் கரடியாகும். இதையடுத்து தற்போது பிடிபட்டுள்ள கரடி ஆண் கரடியாகும். சன்ஷைன் நகரில் இருந்து மிளிதேன், மிஷன் காம்பவுண்ட் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வந்த 2 கரடிகளும் பிடிபட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் இனி அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.