கோவை : கோவை மாநகரில் ஒரு சில நேரங்களில் சிக்னல்கள் செயல்படாமல் போவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மாநகரில் ஒரு சில நேரங்களில் சிக்னல்கள் செயல்படாமல் போவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமான கோவையில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகர வளர்ச்சியில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரம் முன் நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல, பொதுமக்களின் வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அடிக்கடி பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலை விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக சிக்னல்களை மதித்து நடந்தால் அதிகபட்சமாக விபத்துகளை தவிர்க்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்காக கோவை மாநகரில் உள்ள போக்குவரத்து காவல் மேற்கு எல்லையில் 23 சிக்னல்களும், கிழக்கு எல்லையில் 28 சிக்னல்களும் என மொத்தம் 51 சிக்னல்கள் உள்ளது. அதேபோல, தனியார் அமைப்பின் உதவியுடனும் சில இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே செயல்பட்டு வரும் சிக்னல்கள் அடிக்கடி பழுதாகி செயல்படாமல் போவதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
குறிப்பாக, மகளிர் பாலிடெக்னிக் முன்புறமுள்ள சிக்னலும், மணிஷ் பள்ளி அருகே உள்ள சிக்னலும் கடந்த சில நாட்களாகவே செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மகளிர் பாலிடெக்னிக் சிக்னலும், மணிஷ் பள்ளி சிக்னலும் காந்திபுரம், அவிநாசி ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய முக்கிய சிக்னலாக உள்ளது. இந்த சிக்னலை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் என பலதரப்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இதில், முக்கியமாக இந்த இரண்டு சிக்னல்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, இவை விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது.

ஆகவே, மாநகர காவல்துறையினர் உடனடியாக இந்த இரண்டு சிக்னல்களை சரிசெய்து பாதுகாப்பான பயணத்தை பொதுமக்களுக்கு தரவேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.