கோவை : கோவையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் மறறும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் ஆலோசனைக் கூட்டம் கோவை கொடீசியா அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை : கோவையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் மறறும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் ஆலோசனைக் கூட்டம் கோவை கொடீசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

தொழில் நகரமான கோவையில் பொறியியல் துறை சார்ந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் வங்கிக்கடன் பிரச்சனை போன்றவற்றால் சிறு, குறுந்தொழில் தொடர்ந்து மந்தநிலையில் இருப்பதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், நிறுவனங்களின் பிரச்சனைகள் குறித்தும், அவற்றின் தேவைகளை மத்திய அரசிற்கு எடுத்து செல்லும் விதமாக கோவையில் உள்ள பல்வேறு சிறு,குறுந்தொழில் நிறுவன சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கோவை கொடீசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

கொடீசியா, கோப்மா, கோ- இந்தியா உள்ளிட்ட 11 நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும், வங்கிக்கடன் கடன் வழங்குவதில் உள்ள பிரச்சனைகள், இறக்குமதி வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, கோவையைப் போலவே திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளிலும் தொழில்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.