கோவை : கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தகர்க்கும் வகையில், சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை : கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தகர்க்கும் வகையில், சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாத கும்பல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கோவில், வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி, சூலூர் விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மதம்சார்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு, சூலூரை அடுத்த காங்கேயம் பாளையம் பகுதியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சூலூர் பகுதியில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைகளுக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 25-க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மதியம் சூலூர் விமானப்படை தளத்திற்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அங்கு, விமானப்படைத்தள கமாண்டோவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது, பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகளிடம் விமானப்படைத்தள கமாண்டோ தெரிவித்தார். அதேபோல, பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த நேரத்திலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் விமானப் படைத்தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.