கோவை : முன்னாள் மத்திய நிதியமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : முன்னாள் மத்திய நிதியமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெற்று தர கோடி கணக்கில் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதே விவகாரத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ப. சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, பழி வாங்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கையைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டாமுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என். கந்தசாமி, மாநில துணை தலைவர் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சவுந்தரகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சற்று ஓரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டம் செய்யும்படி காவல்துறை சார்பில் கூறபட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு இருந்த காவல் அதிகாரிகள் சமாதானம் செய்ததையடுத்து, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
இதன் பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ப.சிதம்பரம் திடீரென கைது செய்யப்படவில்லை. இதனை எதிர்பார்த்தது தான். வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஒருவரை கைது செய்து இருப்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியின் எச்சரிக்கை மணியாகவே பார்க்கிறோம். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்தவர். அவரை பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி இதற்கெல்லாம் அஞ்சாது. இது ஜனநாயகப் படுகொலை. கட்சியும், தொண்டர்களும் அவருக்கு ஆதரவாக உள்ளது,” என்றார்.