கோவை : வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலை பகுதிகளில் வசித்து வந்த மக்களை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வாழும் இடத்திற்கே பட்டா வேண்டும் என்றும், இல்லையேல் நகரத்தில் உள்ள அரசுத்துறைக்கு சொந்தமான நிலத்தில் குடியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில் ஈடுபட்டனர். பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு முத்தண்ணன்குளம், குமாரசாமி காலணி, சங்கனூர் சாலை, சண்முகாநகர், பூசாரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். இதனையறிந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பது என அனைவரும் குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகத்திலேயே அமர்ந்தனர். இதனையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 30ம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.