கோவை : மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றிய மசோதாவில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், மூன்றாம் பாலினரை வன்புணர்வு செய்தால் தண்டனைக் கடுமையாக்கப்பட வேண்டும் என சகோதரி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
கோவை : மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றிய மசோதாவில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், மூன்றாம் பாலினரை வன்புணர்வு செய்தால் தண்டனைக் கடுமையாக்கப்பட வேண்டும் என சகோதரி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

சகோதரி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவையில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25 வரை பால் புதுமையினரின் உரிமைகளுக்கான நிகழ்ச்சிகள் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றது. இறுதியாக வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி மாலை கோவையில் பிரமாண்ட வானவில் சுயமரியாதை பேரணி நடத்தப்படுகின்றது. இந்தப் பேரணியில் ஒரு பாலீர்ப்பு கொண்டோர், இரு பாலீர்ப்பு கொண்டோர், திருநங்கைகள், திருநம்பிகள், மகிழ்வன், மகிழ்வி என கேரளா, பெங்களூரு, பாண்டிச்சேரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இந்தப் பேரணியின் நிறைவில் திருநங்கைகள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்கள் கெளரவப்படுத்தபட உள்ளனர்.
நாட்டில் எல்லோருக்கும் வாழவும், காதல் செய்யவும், அன்பு செலுத்தவும் உரிமை உண்டு. ஒரு பால் ஈர்ப்பு கொண்டவர்கள், இரு பால் ஈர்ப்பு கொண்டவர்கள், திருநங்கை, திருநம்பி, மகிழ்வன், மகிழ்வி போன்றவர்களின் காதல் சிறுமைப்படுத்தப்படுகின்றது. மாற்று பாலினத்தவரை மூன்றாம் பாலினமாகவும்,
ஒரு பால் ஈர்ப்பு தவறல்ல எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிமைகள் குறித்து விளக்கவும், கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லவும் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது. இந்தப் பேரணியில் 7 வண்ண உடைகள் உடுத்தி கொடிகள், பதாகைகளுடன் பங்கேற்க இருக்கின்றோம். குற்றம் சாட்டும் சமூகமே தங்களை சிதைக்கிறது. நல்ல சமூகம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியது. பெற்றோர்தான் மூன்றாம் பாலினத்தவர் பிச்சை எடுக்கக் காரணம். வேறு வழியின்றி மூன்றாம் பாலினத்தவர் பாலியல் தொழிலும், பிச்சையும் எடுக்கின்றனர்.
மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தங்களுக்கு திருப்தியானதாக இல்லை. மூன்றாம் பாலினத்தவரை வன்புணர்வு அல்லது வன்கொடுமை செய்தால் 2 ஆண்டு தண்டனை என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும் என கோவையில் நடக்கும் சுயமரியாதை பேரணியில் வலியுறுத்துவோம். பெண்ணிற்கு வன்கொடுமை நடக்கும் போது வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படுவதைப் போல, மூன்றாம் பாலினத்தவர்களை வன்கொடுமை செய்தால் தண்டனைக் கடுமையாக்கப்பட வேண்டும்.
கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டோம். தற்போது பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் இதற்கு முன்னோடியாக உள்ளது, எனக் கூறினார்.
மேலும், திருநங்கைகள் சிலர் தவறாக செயல்படுகின்றனரே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எல்லா திருநங்கைகளும் தவறு செய்வதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறு ஒட்டு மொத்த சமூகத்தினரையும் தவறாக பார்க்கப்படுகிறது. 2015-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 4,88,000 பேர் உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய எண்ணிக்கை கிடைக்கப் பெறவில்லை, என கல்கி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது திருநங்கை மேடை கலைஞர் பிரேமா, கோயமுத்தூர் 1 அமைப்பு உறுப்பினர் அருண் பாலகிருஷ்ணன், மருத்துவர் சாகுல் ஹமீது, ரோட்டரி ஆக்ருதி மகளிர் சங்க தலைவி அங்கயற்கண்ணி, செயலாளர் கவிதா கோபாலகிருஷ்ணன், திட்ட மேலாளர் ஹேமா புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.