கோவை : கோவையில் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக செல்பி எடுத்து முகநூலில் பகிர்ந்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவை : கோவையில் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக செல்பி எடுத்து முகநூலில் பகிர்ந்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனையடுத்து, கோவையில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சூயஸ் நிறுவனம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக செல்பி எடுத்து முகநூலில் பதிவிடும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செல்பி எடுக்கும் இயக்கத்தை, வாலிபர் சங்க மாநில செயலாளர் பாலா செல்பி எடுத்து துவக்கி வைத்தார். ஏராளமான வாலிபர் சங்கத்தினர் குடிநீர் எங்கள் உரிமை, சூயஸ் நிறுவனமே வெளியேறு என்கிற பேனர் முன்பாக நின்று செல்பி எடுத்து முகநூலில் பதிவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, மாநில செயலாளர் எஸ்.பாலா செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநில முழுவதும் செல்பி எடுக்கும் போராட்டத்தை துவக்கியிருக்கிறோம். உலக புகைபட தினத்தில் இந்த செல்பி எடுக்கும் போராட்டம் சூயஸ் நிறுவனமே வெளியேறு என்ற முழக்கத்தின் முன்பு செல்பி எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிடப்படும். வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதேபோன்று செல்பி எடுத்து முகநூலில் பதிவிட உள்ளனர். புகைபடத்திற்கு வலுவான ஆற்றல் உண்டு என்பதால் இந்த செல்பி எடுக்கும் போராட்டம் நடத்தப்படுகின்றது.
துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததற்காக, மெழுகுவர்த்தி ஏற்றியதற்காக என ஆட்சியாளர்களின் கைது நடவடிக்கை தொடர்கிறது. பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம் நடத்தியதற்காக வாலிபர் சங்கத்தினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், புதிய கல்வி கொள்கை குறித்து பேசினால் மிரட்டல், அச்சுறுத்தல் நடவடிக்கை என ஜனநாயக விரோத அரசாக இந்த ஆட்சியாளர்கள் திகழ்கிறார்கள். தண்ணீரை விற்பனை பொருளாக மாற்றிவிட்டு பாலத்திற்கு பச்சை வண்ணம் பூசினால் அனைத்தும் பசுமையாகிவிடாது. மக்கள் மனம் குளிராது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தினால் கைது என்கிற நடவடிக்கையை வாலிபர் சங்கம் ஒருபோதும் ஏற்காது. சூயஸ் நிறுவனத்தைக் கண்டித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்த கோவையைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கையால் போராட்ட நடவடிக்கையை முடக்க முடியாது என்பதை அரசுக்கு எச்சரிக்கிற விதத்திலேதான் இந்த செல்பி போராட்டம் நடத்தப்படுகிறது. சூயஸ் நிறுவனத்திற்கு எதிரான எங்களது போராட்டம் மேலும் தீவிரப்படுத்துவோம், என தெரிவித்தார்.