கோவை : ஆடி வெள்ளியையொட்டி கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
கோவை : ஆடி வெள்ளியையொட்டி கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதும், அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்தால் எண்ணிய காரியம் ஈடேறும் என்பதும் ஐதீகம். இந்த நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரசித்தி பெற்ற கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி அம்மன் கோவிலில் 508 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. கோவை ஆலயம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அங்குள்ள மண்டபத்தில் விளக்குடன் வரிசையாக அமர்ந்திருந்த பெண்கள், அருள்மிகு வள்ளி அம்மனுக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தாங்களும் அந்த மந்திரத்தை கூறி வழிபாடு நடத்தினர்.

கணபதி வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் அம்மன் வழிபாடு, திருமாங்கல்ய வழிபாடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனை நினைத்து திருவிளக்கேற்றி வழிபட்டால் தொழில் விருத்தி, குடும்ப அமைதி மற்றும் செல்வ செழிப்பு உருவாகும் என நம்பப்படுவதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.