கோவை : சாலை விதிகளை மீறுவோரிடம் இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று தொடங்கி துவக்கி வைத்தார்.
கோவை : சாலை விதிகளை மீறுவோரிடம் இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று தொடங்கி துவக்கி வைத்தார்.
காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் உடனடி அபராதமாக பணம் வசூலித்து, அதற்கான ரசீதுகளை எழுதி வழங்கி வந்தனர். பணம் இல்லாதவர்களிடம் அதற்கான ரசீது வழங்கப்பட்டு, அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தும் வகையில் அறிவுறுத்தப்படும். இதில், முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இயந்திரம் மூலமாக அபராதம் செலுத்தும் (இ-சலான்) முறையை காவல்துறை கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த முறை சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் இ-சலான் முறையில் அபராதம் செலுத்துவதற்கான இயந்திரங்கள் துடியலூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி என 4 போக்குவரத்து காவலர்களுக்கும், 12 சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுக்கும் என 16 இ-சலான் இயந்திரங்களை முதற்கட்டமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் வழங்கினார்.

சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் பணம் பெறாமல், அவர்களது ஏ.டி.எம். அட்டை மூலமாக அபராதத் தொகையை செலுத்துவதற்கு இந்த இயந்திரம் பயன்படும். ஏ.டி.எம். அட்டை இல்லாதவர்கள் காவல்துறையால் வழங்கப்படும் ரசீதைக் கொண்டு இ-சேவை மையம், தபால் நிலையம் மற்றும் காவல்துறை இணையதளத்தில் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த இயந்திரத்தில் வாகனத்தின் பதிவு எண், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பதிவு செய்தாலே, நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், காவல்துறைக்கும் அது குறித்த தகவல் சென்றுவிடும். எனவே, ஒருமுறை போக்குவரத்து விதியை மீறிவிட்டு பணம் செலுத்தாமல் வேறு எந்த மாநிலத்தில் சிக்கினாலும், அதில் பாக்கித்தொகை இருப்பதாகக் காட்டிவிடும். மேலும், இந்த இயந்திரத்தில் குற்றத்தின் தன்மையை பதிவு செய்தாலே அதற்கான அபராத தொகையும், அதில் தானாகவே வந்துவிடும். மேலும், அபராதம் விதித்து வழங்கப்படும் ரசீதில் “கியூ-ஆர் கொடு” உள்ளதால் அதன் மூலமாகவும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, கோவை மாநகரம் முழுவதும் இ-சலான் வசதி மூலம் அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.