நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழைக்கு 233 பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழைக்கு 233 பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. குந்தா, கூடலூர், அவலாஞ்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும், அணையில் இருந்து பல ஆயிரக்கணக்கிலான கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகள் என அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மிக அதிகமாக 23 இடங்களிலும், அதிகமாக 80 இடங்களிலும், மிதமாக 130 இடங்களும் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்பு, ஆயுதப்படை, தீயணைப்பு படை என மொத்தம் 491 பேர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குந்தா, கூடலூர், உதகை, பந்தலூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், மாவட்டம் முழுவதும் மொத்தம் 155 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 26 நிவாரண முகாம்களில் 157 குடும்பங்களைச் சேர்ந்த 1,706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மழை பாதிப்பினால் 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிவாரண முகாம்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.