கோவை : கோவை நாகராஜபுரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததையடுத்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.
கோவை : கோவை நாகராஜபுரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததையடுத்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில், கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால், மழைநீர் ஆங்காங்கே பாய்ந்து வருகிறது. அதேபோல, குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது. இதன் ஒரு தொடர்ச்சியாக கோவை பேரூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியில் இருக்கும் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வர முடியாதபடிக்கு பொதுமக்கள் மாட்டி தவித்தனர். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்பு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் மாவட்ட அலுவலருக்கு உடனடி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தெற்குப் பகுதி தீயணைப்பு துறையினரும், வடக்குப்பகுதி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முத்து குமார், செல்வ மோகன் லீடர்ஸ் கருப்புசாமி, சசிகுமார் என மொத்தம் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் குடியிருப்பு பகுதியில் மாட்டிக் கொண்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மழைநீரில் மாட்டிக்கொண்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களை தீயணைப்பு துறையினர் தூக்கி வந்து பாதுகாப்பான இடங்களில் விட்டனர். இப்படி சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி 50-க்கும் மேற்பட்டோரை பத்திரப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
அதேபோல, கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, தொடர்ந்து மீட்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.