கோவை : அன்னூர் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரே நேரடியாக சோதனை நடத்தி 13 பேரை கைது செய்துள்ளார்.
கோவை : அன்னூர் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரே நேரடியாக சோதனை நடத்தி 13 பேரை கைது செய்துள்ளார்.
அன்னூர் காவல்நிலைய சரகம் அன்னூர் - புளியம்பட்டி சாலையில் செல்லப்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் பின்புறம் அமைந்துள்ள சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தகர சீட்டு வேயப்பட்ட கொட்டகையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வியாபாரம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய பயிற்சி துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் மற்றும் தனிப்படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, மூன்று வயர்லெஸ் போர்ட்டபுள் பிரிண்டர் வைத்து லாட்டரி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சொல்லும் மூன்று நம்பரை பிரிண்ட் செய்து கொடுத்துவிட்டு லாட்டரி சீட்டு தொகையை வசூல் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாட்டரி தடை சட்டத்தின் கீழ் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், துரைசாமி, ஜீவா, ரமேஷ், நவீன், செந்தில், செந்தில்குமார், வெள்ளிங்கிரி, பழனிச்சாமி, வேலுச்சாமி, தர்மன், அருள் பிரகாசம், பொன்ராஜ், மரிய லூயிஸ் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், மூன்று வயர்லெஸ் போர்ட்டபுள் பிரிண்டர், 22 ஆண்ட்ராய்டு செல்போன், நான்கு சக்கர வாகனம் மற்றும் ரூ. 1,09,609 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள சுந்தர்ராஜ், சாமிநாதன், ஹரி, பிரபு மற்றும் கஜேந்திரன் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார்.