கோவை : தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளவை எட்ட உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கோவை : தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளவை எட்ட உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது கேரள காடுகளையும், நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரினை ஆதாரமாக கொண்டுள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து இன்றி அணையின் நீர மட்டம் 80 அடிக்கும் கீழ் சென்றது. இதனால், மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான முள்ளி, அட்டப்பாடி போன்ற பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு நீர் வரத்தானது அதிகிரிக்க தொடங்கியது. காலை 8 மணி வரை 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, திடீரென 10,000 கன அடியாக உயர்ந்தது. இதனையடுத்து, அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயரத்தொடங்கியது. 100அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்தன் காரணமாக ஒரே நாளில் 9 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
தொடர்ந்து, பில்லூர் நீர்பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரியிலும் மழை நீடித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி மேலும் தண்ணீர் வெளியேற்றப்படும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துனிவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று எச்சரித்து வருவதுடன், தண்டோரக்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். தென்மேற்கு பருவமழையின் போது நிரம்ப வேண்டிய பில்லூர் அணை தற்போது நிரம்பி வருவதால், உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது.