நாமக்கல் : திருச்செங்கோடு அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரையும் உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரையும் உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமையன்று ஆற்றுப்படுகைகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. திருச்செங்கோடு அடுத்த பட்லூர் காவிரி ஆற்றிலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். ஈரோடு பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தியும், அவரது 9 வயது மகன் கிருஷ்ணனும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது, நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் மோகன் பார்த்துள்ளார். உடனடியாக செயல்பட்ட மோகன், ரோந்துப் பணியில் இருந்த தங்கள் குழுவினருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, கயிறு கூட இல்லாமல் ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தகவல் அறிந்த உடன் சுமார் ஒரு நிமிடத்தில் நிலைய அலுவலர் பா. சிவகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர் குழுவினர் கயிற்றைக் கட்டி ஆற்றுக்குள் இறங்கி தந்தையையும், மகனையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கரைக்கு கொண்டு வரப்பட்டபோது, மயக்கநிலையில் காணப்பட்ட இருவருக்கும் தீயணைப்புத்துறையினர் முதலுதவி அளித்தனர்.

மூச்சு பேச்சின்றி கிடந்த சிறுவன் கிருஷ்ணனின் வாயில் தீயணைப்புத்துறை வீரர்களில் ஒருவர் தனது வாயை வைத்து செயற்கை சுவாசத்தை வழங்கினார். அதன் மூலம் சிறுவன் மெல்ல மெல்ல தெளிவுநிலையை எட்டினான். அதேபோல, சிறுவனின் தந்தைக்கும் முதல் உதவி கொடுக்கப்பட்டது. முதலுதவி முடிந்தவுடன் உடனடியாக அவர்களை தீயணைப்பு வாகனத்திலேயே அழைத்துச் சென்று அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின் தந்தையும், மகனும் தற்போது நலமுடன் உள்ளனர்.
இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்தின் நிலைய அலுவலர் பா. சிவக்குமார் சிம்ப்ளிசிட்டி செய்தி குழுவினரிடம் கூறும்போது :- நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்செங்கோடுக்குட்பட்ட 4 ஆற்றுப் பகுதிகளில் எங்கள் தீயணைப்பு குழுவினர் மீட்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பட்லூர் பகுதியில் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து தந்தையும் காப்பாற்ற முயன்று அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்ட எங்கள் குழுவின் வீரர் மோகன் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் சரியான நிலையில் சிந்தித்து முதலில் எங்கள் குழுவினருக்கு உடனடி தகவலைக் கொடுத்து பின்னர் அவர் உயிரை பணயம் வைத்து சிறுவனை மீட்டார். அதைத் தொடர்ந்து, எங்களுக்கு அளித்த தகவலின் பேரில், அழுத்திப் பிடித்து சுமார் ஒரு நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்தோம்.
இதில், நான் உட்பட கோவிந்தசாமி, மோகன், சதீஷ்குமார், துரைராஜ் ஆகிய 5 பேரும் கள்ளு மற்றும் முள் செடிகளில் சிக்கி சிரமப்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றியுள்ளோம்.

இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல, காப்பாற்றியதுடன் முதலுதவி கொடுத்து எங்கள் குழுவினர் செயல்பட்டது வாழ்த்துக்குரியது, என தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து இரண்டு உயிர்களை நீரிலிருந்து மீட்டது முதல் முதலுதவி கொடுத்து இரண்டு உயிர்களையும் பிழைக்க வைத்தது வரை அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.