திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4,179 மாணவ, மாணவிகளுக்கு மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மடிக்கணினி வழங்கினார். அப்போது, மடிக்கணினி கிடைக்காத முன்னாள் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அமைச்சரை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4,179 மாணவ, மாணவிகளுக்கு மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மடிக்கணினி வழங்கினார். அப்போது, மடிக்கணினி கிடைக்காத முன்னாள் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அமைச்சரை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பல்லடம் கல்வி வட்டாரத்தில் உள்ள 9 மேல்நிலைப் பள்ளி மாணவ / மாணவிகள் 4,179 பேருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, இலவச மடிக்கணினி வழங்கும் விழா அரசுப் பள்ளியில் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டு பல்லடம் வட்டாரத்தில் மேல்நிலைக்கல்வி பயின்ற இலவச மடிக்கணினி கிடைக்காத மாணவ, மாணவிகள் அமைச்சரை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அரசு விழா முடியும் வரை மாணவ, மாணவிகள் அமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் பல்லடம் அரசினர் மாளிகைக்கு சென்றுவிட்டதால் மாணவ, மாணவிகள் பல்லடம் மங்களம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், மாணவ மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாணவர்கள் அமைச்சரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதியளித்ததையடுத்து, மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.