கோவை : துடியலூர் அருகே பட்டப்பகலில் ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் 167 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : துடியலூர் அருகே பட்டப்பகலில் ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் 167 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வழிப்பறி, வீட்டில் கொள்ளை என துணிகர கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், போலீசார் இரவுநேர ரோந்து பணிகளை அதிகரித்து உள்ளனர். இருப்பினும், ஆங்காங்கே நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் ஓய்ந்தபாடில்லை. இதில், இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள், தற்போதெல்லாம் துணிகரமாக பட்டப்பகலிலேயே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியைச் சேர்ந்த தாமோதரனின் மகன் ரமேஷ் குமார் என்பவர் நேற்று காலை 11.30 மணியளவில் குடும்பத்துடன் பாலக்காடு சென்றுள்ளார்.

பின்னர் மாலை சுமார் 5.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உள்ளிட்ட பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்து சுமார் 167 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர், இது குறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வெள்ளக்கிணறு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ரமேஷ் குமார் வெளியூர் செல்வதை அறிந்து திட்டமிட்டு, கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட முன்னாள் குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.