கோவை : பாப்பம்பட்டி பிரிவு அருகே அழகுநிலையத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில், கொலையை தற்கொலையாக மாற்ற முயல்வதாகக் கூறி கோவை திருச்சி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையபாளையத்தைச் சேர்ந்த பத்மநாதன், பேபி தம்பதியின் இரண்டாவது மகள் ஷோபானா (25). இவர், பாப்பப்பட்டி பிரிவில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பணிக்குச் சென்ற அவர், அழகுநிலையத்திலேயே தூக்குபோட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். மேலும், ஷோபனா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இளம்பெண்ணின் உயிரிழப்பு சம்பவத்தை தற்கொலை என வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த ஷோபானாவின் உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே கோவை - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த உதவி ஆணையாளர் எழிலரசு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.