கோவை : ஜல்லிக்கட்டுக்காக போராடியதைப் போல கோவையில் தண்ணீருக்காக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என கோவையில் இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
கோவை : ஜல்லிக்கட்டுக்காக போராடியதைப் போல கோவையில் தண்ணீருக்காக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என கோவையில் இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :-
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என கூறியவர் பாரதி. தண்ணீர் இல்லை என்றால் என்ன செய்வது. கோவையை திட்டமிட்டு தண்ணீர் இல்லா நகரமாக மாற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் ரூ. 3,500 கோடிக்கு மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உள்ளாட்சி அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சரும் உடனடியாக 60 வார்டுகளில் நடைபெறும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும். மதுவை நீங்கள் கொடுப்பீர்கள், தண்ணீரை தனியார் தர வேண்டுமா..?, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற அழிக்கும் இந்த திட்டத்தை ஏற்க மாட்டோம்.
தண்ணீர் போர் மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது. சூயஸ் நிறுவனம் சென்ற இடமெல்லாம் கொடூரமாக நடந்துகொண்டிருந்த வரலாறுகள் உள்ளது.
உக்கடம் உட்பட 12 குளங்களில் மீன்பிடிக்க அனுமதி இல்லாதபோது, நாளொன்றுக்கு 4 முதல் 10 லட்சம் வரை மீன்கள் பிடித்து வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி ஒத்துழைப்புடன் இந்த வருமானம், எம்.எல்.ஏ. முதல் அமைச்சர் வரை செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளுமையான கோவையின் சூழல் தட்பவெப்பமாக மாறியதற்கு இங்கு நடக்கும் ஊழலே காரணம். ஜல்லிக்கட்டிற்காக அவனியாபுரம் போய் நின்றதுபோல், கோவையில் நின்று தண்ணீர் யுத்தம் செய்வோம். குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முடக்கி சுருக்கும் திட்டங்களைக் கருணை கொண்டு தாயின் மடி, தாயின் மார்பாக தாய்மை உள்ளத்தோடு பாருங்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஆணையம் அமைத்து, காவிரியில் தண்ணீர் விடாமல், வறட்சியானால் தான் விவசாயம் செய்யாமல் விவசாயிகள் ஓடினால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களில் நிலத்தின் அடியில் இருக்கும் கனிம வளங்களை கொள்ளை அடிக்க முடியும். 500 விவசாயிகள் டெல்டா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
மானமுள்ள தமிழன் தமிழகத்தை ஆளும் காலம் வெகு தொலைவில் இல்லை, எனக் கூறினார்.