கோவை : நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணை கூட ஓயாத நிலையில் தற்போது பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணை கூட ஓயாத நிலையில் தற்போது பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. என விசாரணைகள் கைமாறி தற்போது சி.பி.ஐ. வசம் உள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி பகுதியிலேயே தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என பல இடங்களில் மறைமுகமாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறியது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த சில நாள்களாக காணவில்லை என்று அவரது தந்தை, பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் சிறுமி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நேற்று அம்பராம்பாளையம் அருகே மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவந்துள்ளது. இதில், குமரன் நகரைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞரும் ,சிறுமியும் நண்பர்களாக இருந்துள்ளனர். இப்படியிருக்க சிறுமி அமானுல்லாவை சந்திக்க சென்றபோது, அவருடன் சேர்ந்து சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், அமானுல்லா உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது முதற்கட்டமாக போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால், கைது எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.