கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அரசு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்தததாக் கூறி, ஆத்திரத்தில் மருத்துவரை உறவினர்கள் தாக்கியதுடன் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அரசு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்தததாக் கூறி, ஆத்திரத்தில் மருத்துவரை உறவினர்கள் தாக்கியதுடன் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ருக்மணி (37). இவர்கள் நேற்று குட்டையூரில் இருந்து மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் உள்ள அபிராமி திரையரங்கு அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மாலை 5.30 சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அதன்பின், அங்கு ருக்மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 7.30 மணி அளவில் அன்னூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் ருக்மணி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்த ஆத்திரமடைந்த ருக்மணியின் உறவினர்கள், பணியில் இருந்த மருத்துவர் லட்சுமணனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, உதகை சாலையில் உறவினர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருந்து மாத்திரைகளை தூக்கி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சேர லாதன், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவரை தாக்கியதாகக் கூறி புகார் அளித்துள்ளார். இதோடு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினரின் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் காவல் துறையினரிடம் வலியுறுத்தினர். மேலும், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு உறவினர்கள் மருத்துவமனை செயலிழந்து இருப்பதாகக் கூறி மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.