கோவை : சின்ன தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை : சின்ன தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :- சின்ன தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40.000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கனிமவள கொள்ளையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து ராஜேந்திரன் கூறியதாவது:- சின்ன தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பகுதிகள் விவசாய நிலங்களாகும். பெரும்பாலானோர் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு செங்கல் சூளை அமைத்து, தினமும் 4,000 லோடு செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளவர்கள் 50 முதல் 60 அடி ஆழம் தோண்டி மண் எடுக்கின்றனர். மேலும், மண் அள்ள ரோபோக்களை உபயோகிக்கின்றனர். தற்போது, கிராவல் மண் மற்றும் மணல் அள்ளப்படுகிறது. இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் செங்கல் சூளை உரிமையாளர்கள், இயற்கை வளத்தை அழித்து கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
மேலும், பச்சை செங்கலை வேக வைக்கும் போது வெளிவரும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக மனு அளித்தாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்ட ஆட்சியர் நேரிடையாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.