கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூறாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.
கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தலைமை மருத்துவராக கஜேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் விபத்து பிரிவுக்கு மாற்றியதாக தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவிற்கு இவரை விட ஜூனியரை பணியமர்த்தியதால், மீண்டும் தன்னை அவசர பிரிவிற்கு மாற்ற வேண்டும் என முதல்வர் அசோகனிடம் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அப்போது, முதல்வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கஜேந்திரன் அனுமதி வாங்கி விடுப்பில் சென்றுள்ளார்.
ஆனால், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு இது தொடர்பாக முதல்வர் அசோகன் புகார் அளித்து, அவரை இடமாறுதல் செய்துள்ளார். மேலும் அவரது பணியிடத்திற்கு வேறு மருத்துவரை நியமித்துள்ளார். இதனால், கடந்த 8 மாதமாக பணியிடம் இன்றி மருத்துவர் கஜேந்திரன் இருந்துள்ளார். இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்பட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் இருதரப்பினரிடமும் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர், இவ்வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பின்னர் விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கஜேந்திரன் கூறியதாவது ;- முதல்வர் அசோகன் என்னை இழிவுபடுத்தியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டார். மேலும், பணிக்கு முறையாக வரவில்லை என பொய்யாக புகாரளித்தார். எனது வருகை பதிவை அழித்துள்ளார்.
அசோகனின் பழிவாங்கும் நடவடிக்கையால் வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். அசோகனின் தொந்தரவு காரணமாக பல மருத்துவர்கள் பணியில் இருந்து விலகி சென்றுள்ளனர், எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகனிடம் விசாரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, "மருத்துவமனையில் யாரை எங்கு பணியமர்த்துவது என்பது நிர்வாகம் தொடர்பான விஷயம். விசாரணை தொடர்பாக பேட்டியளிக்க முடியாது," என தெரிவித்தார்.