கோவை : கோவை மாவட்டம் கூடலூர், நெ.4 வீரபாண்டி மற்றும் இடிகரை பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
கோவை : கோவை மாவட்டம் கூடலூர், நெ.4 வீரபாண்டி மற்றும் இடிகரை பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், பேரூராட்சி செயல் அலுவலர்கள் நாகராஜ், நந்தகுமார், விஜயகுமார், பேரூராட்சி பொறியாளர்கள் மனோகரன், நாகராஜ், உதவி செயற் பொறியாளர்கள் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டத்தின் பல்வேறு நகர்ப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் பொருத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி, கூடலூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புறசாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் யு.ஐ.டி கல்லூரி முதல் கூடலூர் கூ.கவுண்டம்பாளையம் வரை 2.2 கி.மீ நீளத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியினையும், நெ.4 வீரபாண்டி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 3.5 கி.மீ நீளத்திற்கு ரூ. 1.50 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு வரும் சாலையினையும், இடிகரை பேரூராட்சியில் எல்லப்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் 2.1 கி.மீ தூரத்திற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், மூன்றடுக்குகாளாக போடப்படும் தார்சாலையின் தரத்தினை, இரண்டாம் அடுக்கில் போடப்பட்டுள்ள கலவை ஜல்லித்தளம் 15செ.மீ., அளவு உள்ளனவா என்பதையும் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பரிசோதனை செய்தார்.
தொடர்ந்து, கூடலூர், கவுண்டம்பாளையம் அம்மன் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், நியாயவிலைப் பொருட்களின் இருப்புகளின் விவரம் குறித்தும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரம் குறித்தும் கேட்டறிந்து முறையாக பொருட்களை விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, இடிகரை பேரூராட்சியில் உள்ள துணை ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் எஸ்.எஸ். குளம் ஆரம்ப சுகதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பிரசவ அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு பிரிவு, மகளிர்; பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவரிடமும் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கேட்டறிந்தார்.