கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்த 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்த 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே 70 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக்காற்று இந்த மரம் சரிந்தது. இதனால், நாள்தோறும் வந்து செல்லும் நோயாளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, ஓசை அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த அமைப்பின் கே. சையத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, மரத்தை மாற்று இடத்தில் நடவு செய்ய முடிவு செய்தார்.

"சூறைக்காற்றுக்கு இந்த மரம் சாய்ந்ததால் கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. எனவே, மரத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்தோம்," என்றார்.
இதனிடையே, ஆலமரம் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதால், மரம் நடவு செய்வதற்கான இடத்தை வழங்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத்திற்கு காளப்பட்டி அருகே உள்ள ஆலம் மண்டேசோரி ஹோம் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. அதில், இந்த பழமையான மரத்தை நடவு செய்வதற்கான இடத்தை வழங்க முன்வருவதாக அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு, மரத்தை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கியது.

கோவை அரசு மருத்துவமனையின் ஊழியர்கள், போலீஸ், வருவாய்த்துறை, மின்வாரியத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியின் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. சுமார் 16 மணிநேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்ட மரம் 15 கி.மீ.க்கு அப்பால் உள்ள காளப்பட்டி பகுதியில் இருக்கும் ஆலம் மண்டேசோரி ஹோம் பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சுமார் 11 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு, நீர் ஊற்றி மரம் நடவு செய்யப்பட்டது. பின்னர், 70 ஆண்டுகள் பழமையான மரத்தை வரவேற்கும் விதமாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

"ஆல மரம் 1,000 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இந்த மரம் பல்வேறு உயிர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும். எனவே, தற்போது, பழமையான அந்த மரத்திற்கு புது வாழ்க்கை பிறந்துள்ளது. இந்த மரம் எங்கள் பள்ளியின் வளாகத்தில் நடவு செய்யும் வாய்ப்பை பெற்றோம். இதன்மூலம் எங்களது வளாகத்தில் ஆல மரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என பள்ளியின் கரஸ்பான்டன்ட் பூபதி கூறுகிறார்.

எதிர்காலத்தில் குழந்தைகள் இந்த மரத்தின் கீழ் வளருவதை பார்க்க முடியும். இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சி பல்வேறு தரப்பினருக்கு மரங்களை பாதுகாப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன், என சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறினார்.
இதேபோல, அதேநாளில் விளாங்குறிச்சி அருகே உள்ள அம்மருன் பவுண்டரியில் மேலும் ஒரு மரத்தை மாற்றி நடவு செய்யும் பணியில் சையத் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.