கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இயக்கிய 'ஜனனம்' குறும்படத்தை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இன்று வெளியிட்டார்.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இயக்கிய 'ஜனனம்' குறும்படத்தை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இன்று வெளியிட்டார்.
சமுதாயத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் விதமாகவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் 'ஜனனம்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்தத் திரைப்படத்தை அக்கல்லூரியின், அரசியல் அறிவியல் துறையின் தலைவரும், இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் நடத்தி வருபவருமான கனகராஜ் தயாரித்துள்ளார்.
இந்தக் குறும்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்துப் பணிகளும் முடிவுற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேற்குமண்டல துணைத்தலைவர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஐ.ஜி பெரியய்யா பேசுகையில், "உலக அளவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியா. நம் நாட்டின் வளர்ச்சி இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது. எனவே, தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு இலக்கினை அடைவதில் முனைப்பு காட்டுங்கள். மேலும், ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். அது நிச்சயமாக வாழ்க்கையை மேம்படுத்த உதவும்." என்றார்.