நீலகிரி : உதகை பங்களாவில் கடன் விவகாரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டாரின் மனைவியை உதகை போலீசார் மீட்டதோடு, கடத்தல் கும்பலை கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நீலகிரி : உதகை பங்களாவில் கடன் விவகாரத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டாரின் மனைவியை உதகை போலீசார் மீட்டதோடு, கடத்தல் கும்பலை கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், பெங்களுரை சேர்ந்த ஆசூர் ஆலம், செல்வின், நவாஸ், பீரித்தி ஆகியோரிடம் ரூ. 95 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இதுகுறித்து இருதரப்பிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி ஜூலி இருவரையும் சிலர் கடத்தி, உதகையில் வைத்திருப்பதாக அவர்களது மகள் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், உதகையில் பவர் ஸ்டாருக்கு சொந்தமான பங்களாவை எழுதி வைக்குமாறு கடத்தியவர்கள் மிரட்டியுள்ளனர். அந்த பங்களா, அவரின் மனைவி ஜுலி பெயரில் உள்ளதையடுத்து, பவர் ஸ்டாரை விடுவித்தால் எழுதி தருவதாக ஜூலி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பவர் ஸ்டார் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
உடனே, சென்னை கிளம்பிய பவர் ஸ்டார், கோயம்பேடு காவல்நிலையத்தில் தனது மனைவியை சிலர் உதகையில் ஒரு பங்களாவில் கடத்தி அடைத்து வைத்திருப்பதாக புகாரளித்துள்ளார். இதையடுத்து, உதகை ஜி1 காவல்துறையினர் ஜூலியை மீட்டு, கடத்திய 4 பேரையும் கைது செய்தனர். பின் அவர்கள் சென்னை கோயம்பேடு காவல்நிலைய காவல் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜூலி பேசுகையில், "பெங்களுரை சேர்ந்த 4 பேர் என்னை உதகைக்கு கடத்தி வந்து தனியார் பங்களாவில் அடைத்து வைத்திருந்தனர்.எங்களுக்குச் சொந்தமான உதகை பங்களாவை எழுதி வைக்கச் சொல்லி வட மாநில இளைஞர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்," என்றார்.