கோவை : குப்பை மேலாண்மை முறையை சரியாக கடைபிடித்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வெள்ளலூர் குப்பைக் கிடங்குகளில் இருக்கும் குப்பைகள் அழித்தொழிக்கப்படும் என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை : குப்பை மேலாண்மை முறையை சரியாக கடைபிடித்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வெள்ளலூர் குப்பைக் கிடங்குகளில் இருக்கும் குப்பைகள் அழித்தொழிக்கப்படும் என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கடந்த 2003-ம் ஆண்டு முதல் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதில், குப்பைகள் முழுமையான அளவில் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. பல டன் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தக் குப்பைக் கிடங்கை மூட வலியுறுத்தியும், கிடங்கில் உள்ள பழைய குப்பைகளை அகற்ற உத்தரவிடக் கோரியும் ம.தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் வே. ஈஸ்வரன், கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் 15.5 லட்சம் கனமீட்டர் பரப்பளவில் உள்ள பழைய குப்பைகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பயோமைனிங் முறையில் அழிக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பாடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழு கண்காணிக்கும். குப்பைக் கிடங்கு செயல்பாடு தொடர்பான புகார்களை நீதிபதி ஜோதிமணி தலைமையிலான குழுவிடம் மனுதாரர் தெரிவிக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றுவது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையிலான கண்காணிப்புக்குழு தனது விசாரணையை நேற்று தொடங்கியது. அப்போது, 15.5 லட்சம் கன மீட்டர் பரப்பளவில் உள்ள பழைய குப்பைகளை ஜனவரி 15-ம் தேதிக்குள் அழிப்பது தொடர்பான டெண்டர் விரைவில் நடைபெறும். கோவையில் விரைவில் 64 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அதில், 10 மையங்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். அதில், பயோமைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்படும். 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குப்பைகளை கையாளவும், அழிக்கவும் பணியமர்த்தப்படுவார்கள். திடக்கழிவுப் பொருட்களைப் பிரிப்பதன் மூலம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும், இவ்வாறு அந்தக் குழு தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை அழிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருக்கும் பழைய குப்பைகளை அழிப்பது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில், "பழைய குப்பைகளை அகற்றுவது கோவை மாநகராட்சிக்கு கடினமான காரியமாகும். இருப்பினும், பயோமைனிங் முறையில் குப்பைகளை அழிப்பதற்கான டெண்டர் விடப்பட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு, கும்பகோணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறையைப் பின்பற்றி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருக்கும் குப்பைகள் அகற்றப்படும். இது சாத்தியமானால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் சேரும் குப்பைகள் மொத்தமாகவே அழிக்கப்பட்டுவிடும்," என்றார்.
மேலும், அவர் கூறியதாவது :- மாநகரில் மொத்தம் சேகரிக்கப்படும் குப்பைகளில் 59% சதவீத ஈரமான கழிவுகளாகும். அதில், மறுசுழற்சி செய்யப்பட்ட 19 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்யப்படுவதால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 5 கோடி வருமானம் கிடைக்கும். 58 சதவீதம் இயற்கைக் கழிவுகளும் கையாளப்படுகிறது. மாநகர் முழுவதும் உள்ள அமைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் வைத்து குப்பைகள் பிரித்தெடுக்கப்படும்.
முதற்கட்டமாக ரூ. 70 லட்சம் செலவில் 10 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் மாநகரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட இருக்கிறது. மேற்கு மண்டலத்தில் 7 மையங்களும், மத்திய, தெற்கு மற்றும் வடக்கும் மண்டலங்களில் தலா ஒரு மையமும் அமைக்கப்படும். அடுத்த 6 மாதத்திற்குள் 67 மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நாள்தோறும், 2 முதல் 5 டன் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம், வெள்ளலூர் குப்பை கிடங்கில், குப்பைகள் சேருவதை தடுக்க முடியும், என்றார்
மேலும், பயோமைனிங் முறையில் அழிக்கும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் எனில் இன்னும் இரண்டு வருடங்களுக்குள்ளாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளே இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் இந்த செய்தி தொடர்பான செய்திக்கு - கிளிக் செய்யவும்
வெள்ளலூர் குப்பைக் கிடங்கை அகற்றுவது தொடர்பான பணிக்கு வரும் ஜனவரி 15-க்குள் டெண்டர் அறிவிப்பு