கோவை : கோவையில் சாலையோர கடையில் ரோந்து இருசக்கர வாகனத்தில் சென்று, சீருடையில் காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அந்தக் காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
கோவை : கோவையில் சாலையோர கடையில் ரோந்து இருசக்கர வாகனத்தில் சென்று, சீருடையில் காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அந்தக் காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
சைரன் ரோந்து இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் சீருடையில், சாலையோரத்தில் வீட்டில் வளர்க்கும் மீன் விற்கும் கடை நடத்துபவரிடம் எதோ பேசுகிறார். உடனே, அந்த கடைக்காரர் தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி மறைவாகக் கொடுக்கிறார். அதை, அந்த காவலர் கைநீட்டி வாங்கி, தனது கைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பேசுகிறார். இவை அனைத்தும் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடக்கிறது.
இதை, அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லஞ்சம் பெற்றவர் கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் விஜய் ஆனந்த் என்பது தெரியவந்தது. உடனே லஞ்சம் வாங்கிய காவலர் விஜய் ஆனந்த் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி, கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.