கோவை : கோவையில் பெற்ற குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவான தந்தை மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவையில் பெற்ற குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவான தந்தை மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராணி, பத்மனாபன் தம்பதியினர். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கணவன், மனைவி இருவருக்குள்ளும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இருவரிடையும் எழுந்த விவாதம் முற்றி கடுமையாக சண்டையிட்டுள்ளனர்.

இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு போலீசார் வந்து பேசி சமரசம் செய்துள்ளனர். அதன் பின் செல்வராணி வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்நிலையில், குழந்தைகள் அவரது தந்தை உடன் இருந்திருக்கின்றனர். தாயார் செல்வராணி இன்று காலை வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பார்க்க கதவைத் திறந்துள்ளார்.

அப்போது இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.