கோவை : கோவை அவினாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கோவை : கோவை அவினாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவினர் மவுன ஊர்வலமாகச் சென்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, கோவை அவினாசி சாலையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மவுன ஊர்வலம் செல்ல முடிவெடுக்கப்பட்டு, கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இதற்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், ஆறுக்குட்டி ஆகியோர் தலைமை ஏற்றனர்.

அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலை வரையிலும் மவுன ஊர்வலமாக சென்ற தொண்டர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1000- க்கும் மேற்பட்டோர், இந்த மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், அ.தி.மு.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைப் போல, மேட்டுப்பாளையத்தில் கோவை மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைதி ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தின் அருகில் வைணவ முறைப்படி தர்ப்பணம் கொடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலியை செலுத்தினர். மேலும், சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
