கோவை : சவுரிபாளையம் சாலை அருகே கல்லறை வீதி பகுதியில் சாலைக்கு அடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பல நாட்களாக வீணாக சாலையில் குடிநீர் ஓடுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : சவுரிபாளையம் சாலை அருகே கல்லறை வீதி பகுதியில் சாலைக்கு அடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பல நாட்களாக வீணாக சாலையில் குடிநீர் ஓடுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 14,15 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதி சவுரிபாளையம் சாலை கல்லறை வீதி. இங்கு இப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் ஃபோர் நீர் வழங்குவதற்காக சாலைக்கு அடியில் மெயின் கனெக்ஷன் (Main connection) என பேச்சு வழக்கில் சொல்லக்கூடிய பகுதிகளுக்கு நீர் செல்கிறது.
இதனிடையே, சவுரிபாளையம் சாலையில் இருந்து சிங்காநல்லூர், புலியகுளம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல கல்லறை சாலை பிரதானமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக செல்கிறது. சில சமயங்களில் கனரக வாகனங்களும் செல்வதால் சாலைக்கு அடியில் உள்ள குடிநீர் உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், சுமார் ஒருமாத காலமாக நீர் சாலையில் வீணாக செல்கிறது. நீர் சாலையில் தேங்கியுள்ளதால் வாகனங்களில் அவ்வழியாக செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். வீணாக செல்லும் குடிநீரையும், அதனால், வாகன ஒட்டிகளுக்கு ஏற்படும் சிரமத்தையும் சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அவ்வழியாக செல்லும் ராஜரத்தினம் என்பவர் கூறுகையில், "தண்ணீர் கிடைக்காமல் பலரும் அவதிப்படும் உலகில் நமக்கு கிடைக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு இல்லாத வண்ணம் சாலையை சீர்செய்ய வேண்டும்," என்றார்.

கல்லறை வீதி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடிநீர் கசிவால் தண்ணீர் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி அது தொடர்பான நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் மோசஸ் என்பவர் கூறுகையில், "டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவி வரும் இந்த சூழ்நிலையில், தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சீர்கேடு உருவாவதற்கு முன் நடவடிக்கை வேண்டும்," என்றார்.
இது குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல நிர்வாக பொறியாளர் (Executive Engineer) பார்வதி கூறுகையில், "இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அளிக்கும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது," என்றார்.