நீலகிரி : நீலகிரியில் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீலகிரி : நீலகிரியில் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரியில் பயிரிடப்படும் முக்கிய காய்கறி கேரட். இது சுமார் 2 ஆயிரத்து 300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இவற்றை (கேரட்) நள்ளிரவு 2 மணியளவில் கூலித் தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்து, காலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பிவிடுகிறார்கள்.

இதனால் சமூகப் பிரச்சினைகள் மற்றும் வனவிலங்குகள் தொழிலாளர்களைத் தாக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதைத் தவிர்த்து, காலை 6 மணியளவில் கேரட் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் சந்தைக்கு காலை 10 மணியளவில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், கேரட் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் இதுதொடர்பாக விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி காலை 10 மணியளவில் வியாபாரிகள் கேரட் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும்.
எனவே, விவசாயிகள் இதனைப் பின்பற்ற வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகம் அனைத்து கேரட் விவசாயிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இந்த முறையினை அனைத்து வியாபாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.