கோவை மத்திய சிறையில் மருத்துவ உதவியில்லாமல் நிகழும் மரணங்கள் : சிறைத்துறையினர் மீது நிறையும் குற்றச்சாட்டுகள்

கோவை: கோவை மத்திய சிறை கடந்த 1872-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 167.76 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறையில், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே கைதிகளின் மரணம் அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மத்திய சிறை கடந்த 1872-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 167.76 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறையில், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே கைதிகளின் மரணம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், கைதிகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு, சிறையில் போதுமான மருத்துவ உதவிகள் கிடைக்க அரசு முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

புள்ளிவிவரம்

கடந்த 2012-ல் தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள் படி இந்தியாவில் மொத்தம் 1,571 சிறை மரணங்கள் நடந்துள்ளன. இதில் 1,516 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள். இதில் ஆண்களில் இயற்கையாக மரணமடைந்தவர்கள் 1,345 பேர். தற்கொலை செய்து கொண்டவர்கள் 87, மரண தண்டனை நிறைவேற்றம் 1, சிறைவாசிகளாலேயே கொலை செய்யப்பட்டவர்கள் 4, தீ விபத்தால் உயிரிழந்தவர்கள் 10, கவனக்குறைவு மற்றும் அத்துமீறல் 2, பிற காரணங்களால் மரணமடைந்தவர்கள் 22 பேர். பெண்களில் இயற்கை மரணம் 47, தற்கொலைகள் 5, வெளியாட்களால் கொலை 3. 

கைதிகளின் வேதனை

கோவை மத்திய சிறையில் தொடர்ச்சியாக கைதிகள் மரணிப்பது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கைதிகள் திடீரென மாரடைப்பு, இளைப்பு போன்ற நோயால் அவதிப்படும் போது அவர்களுக்கு போதுமான மருத்துவ உதவிகள் கிடைப்பது இல்லை.

இதனால் இரவு நேரங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதில் அரசின் சார்பில் சிறைச்சாலைக்கு தேவையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் சிறைவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக முன்னாள் கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர் மரணங்கள்

கோவை மத்திய சிறையில் இதுவரை தஸ்தகீர், சபூர் ரஹ்மான், அப்துல் ஒஜீர், ரிஸ்வான் போன்ற இஸ்லாமிய கைதிகள் இறந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.



பிப்ரவரி மாதம் துரைசாமி என்ற கைதி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல சின்ன காளை என்பவர் ஜூன் மாதத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதே மாதத்தில் ரமேஷ் என்பவர், கைதிகளுக்கு இடையேயான மோதலில் பலியானார். 

கடந்த மே மாதத்தில் சீனிவாசன் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே மே மாதத்தில் சொக்கநாதன் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டு வந்த ஆயுள் தண்டனை கைதி உதயகுமாரும் மரணமடைந்தார்.

ஒரு சிறைவாசி ஆபத்தான சூழலில் உயிருக்குப் போராடி வந்தாலும், சிறைவாசிகளின் அழுகுரல்கள் அதிகாரிகளிடம் சென்று சேர காலம் தாழ்த்தப்படுகிறது. இப்படியான காலதாமதத்தில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் போன பின்னர், சிகிச்சை என்ற அடுத்த கட்டதிற்குள் வந்தால் அங்கு இரவில் மருத்துவர் இல்லை என்பது வேதனையிலும் வேதனை. 

இதில் சிறைத்துறை மருத்துவமனையில் மருத்துவருக்கு பதிலாக, மருத்துவ உதவிப் பணியாளர் தான் சிறையில் இருக்கும் சிறைவாசிக்கு சிகிச்சை அளிக்கிறார். ஆபத்தான சூழலில் மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் தான் கோவை அரசு மருத்துவமனைக்கு சிறைவாசிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்த கால தாமதங்கள் தான் கோவை மத்திய சிறையில் தொடர்ந்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இருக்கும் கோவை மத்திய சிறையில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மிக சொற்பமான எண்ணிக்கையில் இருப்பது ஆபத்தான நிலையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு உதவாது என்பதே நிதர்சனம்.

இதுகுறித்து கோவை மத்திய சிறையின் முன்னாள் சிறை வாசியும், லாக்கப் புத்தகத்தின் எழுத்தாளருமான ஆட்டோ சந்திரன் கூறியதாவது:- 

கோவை மத்திய சிறையில் நான் சிறைவாசியாக இருக்கும் போது பல அனுபவங்களையும், சிறைவாசிகளின் வேதனைகளையும் கண்டுள்ளேன். இந்த அனுபவங்களையும், மனித உரிமை மீறல்களையும் நான் புத்தகமாகவும் எழுதியுள்ளேன்.



இதில், இரவு நேரங்களில் உடல்நிலை பாதிக்கப்படும் சிறைவாசிகளின் நிலைமை வேதனையிலும் வேதனை. கோவை மத்திய சிறையில் இரவு நேரங்களில் திடீரென சிறைவாசிக்கு நெஞ்சு வலி, வீசிங் போன்ற அவசர சிகிச்சைகள் கொடுக்க கால தாமதமாகிறது.

நெஞ்சுவலி ஏற்பட்டு ஆபத்தான சூழலில் இருக்கும் சிறைவாசியின் உயிரைக் காப்பாற்ற சக சிறைவாசிகள் அதிகாரிகளுக்கு கேட்கும் வரை, "வாடன் ஐயா; வாங்க, வாங்க என்று அதிக சத்தம் எழுப்புவார்கள்.

ஆனால், இரவு நேரங்களில் அதிகாரிகள் எளிதில் சிறைக் கதவை திறந்து, சிறைவாசியின் உயிரைக் காப்பாற்ற முடிவு எடுப்பதில்லை. மாறாக எவ்வளவு ஆபத்தான சூழலில் சிறைவாசி இருந்தாலும், அந்த வாடன் அருகே உள்ள மற்றொரு வார்டனுக்கு தகவல் கொடுப்பார். அதன் பின் அந்த வாடன் தலைமை வாடனுக்கு தகவல் கொடுத்து பின்னர், தலைமை வாடன் நேரில் வந்து இருட்டான கொட்டறையில் டார்ச் லைட் அடித்துப் பார்ப்பார். அதன் பிறகு அவர் முடிவெடுத்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பார்.

இத்தனை காலதாமதங்களை கடந்து சிறைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் சிறைக் கதவுகள் திறக்கப்பட்டு, முதலுதவிகள் கொடுக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். இந்த ஆமை வேக செயல்பாடுகள் சுமார் ஒரு மணி நேரத்தைத் தாண்டும். இதனால் சிறை மரணங்கள் ஏற்படுவது அங்கு இயல்பு.

என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்தார். 

காலதாமதம்

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற உடன், அவர் ஒரு வேளை மரணம் அடைந்திருந்தால் நம்மிடம் மருத்துவர்கள் சொல்வது, "நீங்கள் இன்னும் கொஞ்சம் முன்னரே அழைத்து வந்திருந்தால் எப்படியாவது இவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்." என்பது தான். 

ஆனால், சிறையில் நடக்கும் காலதாமதத்தால் தொடர்ந்து சிறை மரணங்கள் நடைபெறுகிறது. இதைத் தடுக்க சிறையின் பழைய முறைகளை மாற்றி நவீன முறைகள் பின்பற்றப்பட்டு, சிறை நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்?

சிறையில் கைதிகள் தாக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதில் சிறை நிர்வாகம் குறித்து கேள்வி கேட்பவர்களுக்கும், புகார்கள் அளிப்பவர்களுக்கும் 'ஓசி-டீம்' என்ற தாக்குதல் நடத்தும் குழுவால் தனிமை சிறைகளும், கடும் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கைதிகள் மத்தியில் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த 'ஓசி-டீம்' தாக்குதல்கள் தொடர்பாக பல புகார்கள் வெளிவந்தும் எந்த விதமான மாற்றமும் இல்லாதது கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் 'ஓசி-டீம்' குறித்து கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று சம்பத் என்ற முன்னாள் சிறைவாசி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையோ அல்லது விசாரணையோ நடைபெறவில்லை எனவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவை மத்திய சிறைக்கு வரும் விசாரணை கைதிகளை 100 அடிகள் லத்தியால் தாக்குவது என்பது இங்கு வாடிக்கையாக உள்ளது. இதை எதிர்த்துக் கேட்டாலும் சரி நிர்வாகம், நியாயம் ஆகியவற்றை பற்றி பேசினாலும் சரி தனிமை சிறைதான்.

அதுவும் அந்த கொடூர சிறையில் இரவில் தூங்கவே முடியாது. தூங்க முடியாத அளவிற்கு தரையில் தண்ணீர் ஊற்றி விடுகின்றனர். பின்னர் திடீரென வரும் 'ஓசி-டீம்' கைதியை கண்மூடித்தனமாக அடிப்பார்கள். இந்த சம்பவங்களை நான் சிறையில் இருக்கும் போது கண்டுள்ளேன்.

ஆகவே இந்த சித்திரவதைகளை சிறையில் இருந்து வெளியே வந்து நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து அந்த நகலை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தேன். இதில் இன்னும் பதில் ஏதும் வரவில்லை. ஆனால், நம்பிக்கையோடு நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்." என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

சிறை காவலில் இருக்கும்போது இயற்கைக்கு முரணான மரணத்தை அடைந்தவர்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்று மனித உரிமைகள் சார்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும், சிறைக் காவலில் இருக்கும் போது சிறைவாசிகளின் மரணம் குறித்து அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குகளைப் பதிவு செய்து இந்த பிரச்சினையை அணுக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

மனித உரிமை ஆர்வலர்களால் வரவேற்கப்பட்ட இந்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் சிறைச்சாலையில் நடக்கும் இயற்கைக்கு மாறான மரணங்களைத் தடுப்பதற்கும், சிறைவாசிகளின் சட்டம் மற்றும் மருத்துவ சேவைகளில் சிறைவாசிகளின் தேவையை பூர்த்தி செய்யவும், சிறையில் மரணம் அடைந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கவும் பரிந்துரைகள் வழங்கியுள்ளது.

இது குறித்து கோவை மத்திய சிறையில் மரணம் அடைந்த கைதி ஒஜீர் என்பவற்றின் சகோதரர் பிலால் கூறியதாவது:-  

எனது அண்ணன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறைக்கட்டுபாட்டில் மரணம் அடைந்தார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும் சிறைத்துறை உரிய சிகிச்சைகள் வழங்கவில்லை. இது சிறைத் துறையின் கவனக் குறைபாடு. எனவே சிறைத்துறையினர் எங்களுக்கு சட்டத்துக்குட்பட்ட இழப்பீடு வழங்க வேண்டும். 



ஆனால், சிறையிலிருந்த எனது அண்ணனின் இறப்பிற்கான இழப்பீடு இதுவரை எதுவும் வரவில்லை. தற்போது எனது அண்ணனின் இரண்டு பெண் குழந்தைகளும் ஏழ்மையில் வாடி வருகின்றனர். ஆகவே அரசு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும். 

என்று கூறினார்.

சிறைகளுக்குள் தற்கொலை தடுப்பு, மனித உரிமை நிலை நாட்டல், சட்ட விதிகள் போன்ற தலைப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கிய 'மாடல் பிரிசன் மேனுவல்' அதேபோல மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படியும் சிறைகாவலில் நடைபெறும் மரணங்களை விசாரணை செய்யும் 'நெல்சன் மண்டேலா' விதிகளையும் டி.ஜி.பி.,களுக்கும், சிறை துறைகளுக்கும் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (national crime records bureau) அமைப்பும் சிறையில் நடைபெறும் அனைத்து மரணங்களையும் வகையாக பிரித்து, இயற்கைக்கு முரணான மரணமாக இருந்தால் அதன் முழு விவரங்களையும் சரியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடகா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கான அடிப்படை மருத்துவ தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. சிறைகளில் கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களும் மருத்துவ வசதிகளும் உள்ளதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி மருத்துவ வசதிகள் இல்லாத பட்சத்தில் சிறைகளில் மருத்துவ வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இது குறித்து மனித உரிமை  செயற்பாட்டாளர்(PUCL) வழக்கறிஞர் ச.பாலமுருகன் கூறுகையில், "உயிர் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்கு அளித்துள்ளது.



இந்த சட்டத்திற்கு உட்பட்டு தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறை கைதியாக இருந்தாலும் தனிமனித உரிமை காப்பாற்றப்பட வேண்டும். மருத்துவம் என்பதும் அரசியல் சாசன உரிமையில் அடங்கும். 

கோவை மத்திய சிறையில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். ஆனால், கைதிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவ வசதிகளும் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. இதனால் கைதிகள் உயிரை கையில் பிடித்தபடி இரவில் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

சிறையில் மருத்துவ குறைபாடுகளாலும், சிகிச்சையின்றியும் கைதிகள் உயிரிழப்பது இயற்கைக்கு முரணான மரணமாக கருதப்படுகிறது. இந்த சிறை மரணங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இதுவரை கோவையில் இறந்த கைதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 

கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சிறைத்துறையில் மனித உரிமைகளை நிலைநாட்ட அளித்த தீர்ப்புகளும் வரையறையும் வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் சிறையில் உள்ள சிறைவாசிகளின் உரிமைகள் காப்பாற்றப்படும்." என்றார்.

சிறையிலுள்ள நோயாளிகளை குணப்படுத்த வேண்டிய மருத்துவமனையாக சிறைகள் இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். சிறைக்கு செல்லும் குற்றவாளி, சிறையின் வாசலிலேயே செருப்பைக் கழட்டி விடுவது போல், மனித உரிமைகளை கழட்டி விடவில்லை என்றும் மறைந்த முன்னாள் நீதிபதி கிருஸ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, சிறைத்துறையானது மனித உரிமைகளை மதித்து ஒவ்வொரு மனிதனின் தனி மனித உரிமையையும் நிலைநாட்டினால் மனிதம் காக்கப்படும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...