மாநகரில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தெருநாய் தொல்லைகள் அதிகரித்துள்ளது.
கோவை: மாநகரில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தெருநாய் தொல்லைகள் அதிகரித்துள்ளது.

பொதுவெளியில் சுற்றித்திரியும் தெருநாய்களால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய் கடியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
துரத்தும் நாய்கள்

"அதிகாலையில் நடைபயிற்சி செய்பவர்களையும், நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்புபவர்களையும் தெருநாய்கள் கடிக்கத் துரத்துகின்றன. சாலையை கடக்கும் வாகனங்களையும் அவை துரத்துவதால் இந்த பகுதியில் வாகன விபத்து அடிக்கடி ஏற்படுகிறது" என்றார் பீளமேடு பகுதியைச் சேர்ந்த முத்துகுமார்.
இந்நிலையில், தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து நபர்கள் தெருநாய் கடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும், பீளமேடு உள்ள தனியார் மருத்துவமனையின் செவிலியர் கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு, மாநகராட்சி சார்பாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்து பராமரிப்பு செய்யும் பணிகளை ஹியூமன் அனிமல் சொசைட்டி ( Humane Animal Society) மற்றும் பிபுல் ஃபார் அனிமல் ( People for Animal) யூனிட் II ஆகிய தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மொத்தமுள்ள 100 வார்டுகளில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 20 வார்டுகளை ஹ்யூமன் அனிமல் சொசைட்டியிடமும், மீதமுள்ள 80 வார்டுகளை பிபுல் ஃபார் அனிமல் யூனிட் II விடமும் வழங்கப்பட்டது. இந்த அமைப்புகள் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு நோயுற்ற தெருநாய்களுக்கு சிகிச்சையளித்தும், பராமரித்தும் வருகின்றனர்.
2014-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை மொத்தம் 23,583 தெருநாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டிய இந்த நடவடிக்கைகள் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தோடு நிறுத்தப்பட்டதால், தெருநாய்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, பிபுல் ஃபார் அனிமல் அமைப்பைச் சேர்ந்த கல்பனா கூறுகையில், "தெருநாய்களுக்கு செய்யப்படும் கருத்தடை சிகிச்சைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம், இன்னும் கையெழுத்திடப்படாமல் மாநகராட்சி நிர்வாகத்தினரால் நிலுவையில் உள்ளது. இதனால், சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவிலை. இந்நிலையில், மாநகராட்சியின் இந்த தாமதத்தால், தெருநாய்கள் மீண்டும் குட்டிப்போடத் தொடங்கி, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் வீணாகியுள்ளது' என்றார்.
இதில் ஈடுபட்டுள்ள மற்றொரு அமைப்பான, ஹ்யூமன் அனிமல் சொசைட்டியை சேர்ந்த மினி சீனிவாசன் கூறுகையில், "நகராட்சி நிர்வாகம், 2013-ம் ஆண்டு வரை ஒரு தெருநாய்க்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு செலவுக்கு ரூ.445 வழங்கி வந்தது. இந்த தொகையை உயர்த்தி ரூ.700 ஆக வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இன்றுவரை அதை அமல்படுத்தவில்லை. இதனால், உபகரணப் பாற்றக்குறை, ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் அரசு நிர்ணயித்த தொகையை முறையாக வழங்கி ஒத்துழைத்தால் மட்டுமே தெருநாய் பிரச்சனை முற்றிலும் சரி செய்ய முடியும்' என்று கூறினார்.
தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, ரேபிஸ் நோயிலிருந்து மக்களை காப்பாற்றி, மக்களின் வரிப் பணத்தை உபயோகமாக செலவிடும் நடவடிக்கைகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.