கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மஹாராஜாகடை அடுத்த மேலுகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் கால் நடைகள் வைத்து பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை விவசாய நிலத்தில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை புலி ராமமூர்த்தியை தாக்க முற்பட்டது. இதனை அடுத்து சிறுத்தை புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மாடுகளுக்கு இலை கொடிகள் வெட்டுவதற்கு வைத்து இருந்த கத்தியால் அதனைத் தாக்கினார். இதில் சிறுத்தை புலியின் கால், கழுத்து, முதுகு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுத்தை புலி பலியானது.

இதில் ராமமூர்த்தியும் காயமடைந்தார். தற்போது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதியவர் தாக்கியதில் சிறுத்தைப் புலி பலியானதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வனகோட்ட கால்நடை மருத்துவர் பிரகாஷ் சிறுத்தைப் புலியை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மேலும் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.