கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ஏ.பி.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா இன்று காலை முதல் மாலை வரை அப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பீளமேடு காவல் நிலையத்தின் காவல் ஆணையர் செல்வராஜ் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் சந்திரகாந்தி பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார். பின்னர், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று விளையாட்டிப் போட்டிற்கான தீப ஒளி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணி அளவில் அப்பள்ளியில் வளாகத்தில் பள்ளியின் ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆய்வாளர் ஆர்.கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, பெற்றோர்கள் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மட்டும் கூறாமல், கூடுதல் செயல்திட்ட நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்றார். அப்போதுதான் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறை மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் முன்னேற்றம் அடைவார்கள் அதன் மூலம் வாழ்வில் முழு வெற்றி பெறுவார்கள் என்றார்.

பின்னர், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, காலை முதல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100மீட்டர் தொடர் ஓட்டப்பந்தையம், 100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென ஓட்டப்பந்தயம், கைப்பந்துப் போட்டி, எறிபந்துப் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சந்திரகாந்தி கோப்பைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், பள்ளி மாணவர்களின் நடனம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கண்களை கவர்ந்தது. முன்னதாக, அப்பள்ளியின் முதல்வர் ராம்தாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். விழாவில், கல்லூரி செயலாளர் விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
