இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் கொலையாளிகளுக்கு உதவியதாக அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சதாம் உசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் காவலின் போது 2 நாட்கள் சதாமை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இது குறித்து பேசிய சதாம் தரப்பு வழக்கறிஞர் ப.ப.மோகன், இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது எனவும் விசாரணை தேவையில்லை என தங்கள் தரப்பில் வாதிட்டதாகவும், இருப்பினும் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சதாமை போலீசார் தனியிடத்தில் வைத்து விசாரிக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.