கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த(19). இவர் கடந்த 21ம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையின் தடுப்பில் மோதி படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சித்தார்த் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். இதன் பின்னர் அங்கு வந்த கபிலாஷ் என்பவர் சித்தார் தனது சகோதரர் என்று கூறியதோடு, அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க போவதாகவும் கூறி மருத்துவ அறிக்கையில் கையொப்பமிட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 'ஒன் கேர்' என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சித்தார்த்தை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி மீண்டும் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சித்தார்த் வரும் வழியிலேயே உயிரிழந்தாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சித்தார்த்-ன் பெற்றோர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், கமிஷனுக்காக தனியார் தொண்டு நிறுவனம் தனது மகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பலியாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள அதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம் செய்யும் ஜீவ சாந்தி என்ற அறக்கட்டளையை சேர்ந்த சிலர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்ப்டுகிறது. அரசு மருத்துவமனையில் இருந்து ஜீவ சாந்தி அறக்கட்டளைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில் சித்தார்த் அழைத்து செல்லப்பட்டார் என்றும் அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடீவி காமிராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் அறக்கட்டளையை சேர்ந்த சித்திக் மற்றும் நசீர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நாளை இவ்வழக்கில் தவறான தகவல் கொடுத்து நோயாளியை அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றதாக கபிலாஷ் மீது வழக்கு பதியப்படலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய இளைஞர் கமிஷனுக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாரா? இந்த உயிரிழப்புக்கு தீர்வு என்ன என்பது போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் மக்களையன்றி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது..