திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை - சூலூரில் அண்ணாமலை பிரச்சாரம்

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் என யாரும் செய்யாத நலத்திட்டங்களை, பாராளுமன்றத் தேர்தலில், திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் மட்டும் செய்து விடுவார்கள் என்பது பொய்யான வாக்குறுதி என அண்ணாமலை கூறியுள்ளார்.



கோவை: கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்றத் தொகுதியில், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், பெரியகுயிலி, இடையர்பாளையம், புளியமரத்துப்பாளையம், வாரப்பட்டி, சின்ன வதம்பச்சேரி, பெரிய வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்களில் நேற்று ஏப்ரல்.16 கலந்து கொண்டு, கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பிரதமரின் நலத்திட்டங்கள், முழுமையாக கோயம்புத்தூர் பாராளுமன்ற மக்களைச் சென்றடைய, நாமும் அந்த 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கோயம்புத்தூரின் வளர்ச்சியைத் தேக்க நிலையில் வைத்து விட்டார்கள். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் என யாரும் செய்யாத நலத்திட்டங்களை, பாராளுமன்றத் தேர்தலில், திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் மட்டும் செய்து விடுவார்கள் என்பது பொய்யான வாக்குறுதி. நடக்கவிருப்பது, நாட்டுக்கான தேர்தல். இந்தத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களிப்பதால், மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.



கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்காக, மொத்தம் 100 வாக்குறுதிகளை, 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்திருக்கிறோம். அவற்றில், சூலூரைப் பொறுத்தவரை, முக்கியப் பிரச்சினையாக, விசைத்தறி மற்றும் விவசாயப் பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களின் அன்பைப் பெற்று, வரும் ஜூன் 4 அன்று பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அடுத்த ஒரு ஆண்டில், ஜூன் 4, 2025 க்குள், விசைத்தறிப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரத் தீர்வு ஏற்படுத்துவேன் என்று பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில், வரலாறு காணாத மின்சாரக் கட்டண உயர்வால், விசைத்தறித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ய, மத்திய அரசின் பவர்டெக்ஸ் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, சூரிய ஒளி மின்சாரத் தகடு அமைக்க, 80% முதல் 95% வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம், மின்சாரக் கட்டண உயர்விலிருந்து, விசைத்தறி தொழில் மீட்கப்படும். மேலும், சோமனூரில் ஜவுளிப் பூங்கா அமைத்து, ஏற்றுமதி மேம்படுத்தப்படும்.

நூல் விலையைக் கட்டுப்படுத்த, நூல் வங்கிச் செயல்பாடு முறைப்படுத்தப்படும். இவற்றின் மூலம், ஒரு ஆண்டில், விசைத்தறித் தொழில் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும்.

மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க, பத்தாயிரம் கோடி ரூபாய் நிதியில், ஆனைமலை நல்லாறு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அத்துடன், நொய்யல் நதியைச் சீரமைக்க ஒதுக்கப்பட்ட்டுள்ள ரூ.990 கோடி நிதியில், நொய்யலின் கிளை நதியான கௌசிகா நதியும் சீரமைக்கப்பட்டு, இந்தப் பகுதிகளில் உள்ள தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன். மேலும், அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு, தொகுதியின் குடிநீர்ப் பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு ஏற்படுத்தப்படும்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள குடிசை வீடுகளில் வசிக்கும் சாமானிய மக்களுக்காக, மோடி வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறார். வீடுகள் கட்ட இடம் இல்லாத பொதுமக்களுக்கும் தரமான வீடுகள் கிடைக்க, மத்திய அரசின் மூலம் அடுக்கு மாடி வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தவிர, அனைத்து வீடுகளுக்கும், குழாய் மூலம் சுத்தமான குடிநீர், ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். நமது குழந்தைகளின் தரமான கல்விக்காக, உலகத் தரத்திலான நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்பட்டு, உயர்தரக் கல்வி, நமது குழந்தைகளுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்வோம் என்ற உறுதியை அளிக்கிறேன். மேலும், முழுவதுமாக மத்திய அரசின் நிதியில் செயல்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தில், முறையான வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம், இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை. பண அரசியல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல் இவை அனைத்தும் ஒழிந்து, வளர்ச்சி அரசியல் நமது கோயம்புத்தூரில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

நமது பாரதப் பிரதமர் மோடி பிரதமராக இருக்கும்போது, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால், நமது தொகுதி, பிரதமர் அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ச்சி பெறும் என்பது உறுதி. 

எனவே, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வாக்களித்து, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க தாமரை சின்னத்தில் மகிழ்ச்சியுடன் வாக்களிப்போம். நமது நாடு இன்னும் வலிமையாக, இன்னும் வேகமாக வளர்ச்சி பெற, முக்கியமான சீர்திருத்த முடிவுகளை மேற்கொள்ள, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன் அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...