கோவை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு கோவை மற்றும் நீலகிரியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு கோவை மற்றும் நீலகிரியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே இருமுடி கட்டி தரிசனம் செய்து வந்த நிலையில், அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்யலாம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும், சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவையில் கோயமுத்தூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஐயப்பன் பஜனை பாடி போராட்டம் நடைபெற்றன. முன்னதாக, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் சரணங்கள் பாடி ஐயப்ப சுவாமி ரதத்துடன் பேரணியாக புறப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஜி.பி. சந்திப்பு, சத்தி சாலை, காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து காந்திபுரம் வீ.கே.கே. மேனன் சாலையை அடைந்தனர்.
பின்னர், சாலையில் அமர்ந்து ஐயப்பன் பஜனைப் பாடல்களை பாடி சபரிமலைக்கு ஆதரவாக நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போராட்டத்தில், பா.ஜ.க. மூத்த தலைவரும் தேசிய கயிறு வாரிய தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஆரிய வைத்திய பார்மசி நிறுவன தலைவர் கிருஷ்ணகுமார் வாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- ஆசாமிகளை சாமிகளாக மாற்றக் கூடியவர் அருள்மிகு ஐயப்ப சுவாமி. சட்டம் படித்தவர்களும், பகுத்தறிவுவாதிகளும் எப்படி ஐயப்பனை வணங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடாது. சட்டம் படித்தவர்கள் புது, புது அர்த்தங்கள் சொல்வது சரியல்ல. நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றும்படி இருக்கின்றதா என்பதை நீதிபதிகள் சிந்திக்க வேண்டும்.
நீதிபதிகள் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள் என்பதை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஐயப்பனை வழிபடும் முறையை மாற்றக் கூடாது. மேலும், நீதிபதிகள் தரக்கூடிய புது, புது தீர்ப்புகள் ஒழுக்கக்கேட்டிற்கும், மன கட்டுப்பாட்டையும் தகர்க்கும் விதமாக இருக்கிறது. மனிதனும், விலங்கும் வேறு,வேறு என்பதை உணர்த்தும் விதமாக தீர்ப்புகள் இருப்பது மனித சமூகத்திற்கு நல்லது, என்றார்.

இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று சபரிமலை புனிதத்தைக் காப்போம், 50 வயது வரை பெண்கள் பொறுத்திருப்போம் எனக் கூறி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பேரணி நடைபெற்றது. ஆனால், பேரணி செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், போலீசாரைக் கண்டித்து அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
இதையடுத்து, பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஐயப்பன் கோவிலுக்கு செல்ல காவல்துறை பேரணிக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பேரணியானது கோவில் வரை சென்றடைந்தது.