கோவை: ரயில்வே மற்றும் சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் நாடகம் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: ரயில்வே மற்றும் சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் நாடகம் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவையில் உள்ள ரயில் நிலையத்தில் ரூட்ஸ் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்லூரி சார்பில் ரயில்வே மற்றும் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும், ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்யக் கூடாது என்பது குறித்து நாடகம் மூலமாக தத்ரூபமாக மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.

இதனிடையே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஓடும் ரயில்களில் யாரும் ஏற வேண்டாம். அதே போல ரயில்கள் நிற்கும் முன்பாக யாரும் இறங்க வேண்டாம். ரயில்வே விபத்துக்களை தடுக்க, காவல் துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது," என்றார்.

மேலும், சென்னையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விபத்துகளை தடுக்க ரயில்வேயில் ஆராய்ச்சி செய்து தொழிநுட்ப ரீதியாக மாற்றங்கள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே பாதுகாப்பு குழு ஏற்படுத்தி வருகிறது எனவும் இந்த விபத்தில் காவல் துறையினர் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.