சென்னை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, தமிழில் 24 ஆயிரம் பேர் எழுதினர். அதில் தமிழில் கேட்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு வினாவுக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டனர். இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலையும் வெளியிட உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டாம் கட்ட நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால், இரண்டாம்கட்ட கலந்தாய்வை தமிழக அரசு நிறுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.