கோவை: குனியமுத்தூர் - புட்டுவிக்கி இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.,வினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: குனியமுத்தூர் - புட்டுவிக்கி இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.,வினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலக்காடு, மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை திருப்பி விட குனியமுத்தூர் அரசு பள்ளியிலிருந்து, புட்டுவிக்கி சாலை செல்ல ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும், தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.
அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்த சாலை 2 மாதங்களே ஆனநிலையில், குண்டும்-குழியுமாக தற்போது காட்சியளிக்கின்றது. இதனிடையே, தற்போது மழை பெய்து வருவதால், இந்த புதிய சாலை அனைத்தும் மோசமாகி, சகதியாக மாறிவிட்டது. இந்நிலையில், தரமற்ற சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து கோவை மாநகர் மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.,வினர் நாற்றுநட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தி.மு.க. வைச் சேர்ந்த முத்துசாமி கூறுகையில்;- இந்த புதிய சாலை 10 நாட்களுக்கு முன்புதான் திறந்து வைத்தனர். அதற்குள் மிக மோசமான அளவில் பழுதடைந்து விட்டது. இந்த சாலை அமைப்பதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மாநகராட்சி நிர்வாகவும் மோசடி செய்துள்ளனர். இந்த சாலையை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலேயே செப்பனிட வேண்டும். இல்லையேல் தி.மு.க., செயல்தலைவர் அனுமதியோடு நீதிமன்றத்தை நாடுவோம், என்றார்.