கோவை மாவட்டம் அன்னூர் அருகே பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மினி ஆட்டோ மீது கழிவு பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
அன்னூரில் இருந்து தெக்கலூருக்கு ராஜேஷ்குமார் என்பவர் மினி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அதில், அன்னூரை சேர்ந்த ராமன் என்பவரும் பயணித்தார். ஆட்டோவை காடுவெட்டிபாளையம் அருகே நிறுத்தி இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாவட்டம் அன்னூருக்கு பல்லடத்தில் இருந்து கழிவு பஞ்சு ஏற்றி கொண்டு வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதினால், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மினி ஆட்டோவின் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த கழிவு பஞ்சுகள் ஆட்டோவின் மீது சரிந்தது. அதில், சிக்கி ஒட்டுநர் ராஜேஷ்குமார் மற்றும் அதில் சென்ற ராமன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரியில் இருந்த ஜந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் அந்த சாலை வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பஞ்சு பேல் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த அன்னூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.